search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் இலக்கிய நிகழ்ச்சி"

    ம.தி.மு.க.வில் மீண்டும் சேரும் எண்ணம் இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். #nanjilsampath #vaiko

    நாகர்கோவில்:

    டி.டி.வி. தினகரன் அணியின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கருத்து வேறுபாடு காரணமாக அவரது அணியில் இருந்து திடீரென விலகினார். பின்னர் இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன். தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்பேன் எனவும் அறிவித்தார்.

    இந்தநிலையில் நேற்று சென்னையில் நடந்த தமிழ் அறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்தும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொண்டனர். அப்போது 2 பேரும் கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.


    நாஞ்சில் சம்பத், ஏற்கனவே ம.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர். நேற்று அவர் வைகோவை சந்தித்து பேசியது ம.தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாஞ்சில் சம்பத் மீண்டும் ம.தி.மு.க.வில் சேர வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதை நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார்.

    வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் முன்னெடுத்த தமிழ் இலக்கிய நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். விசாகப்பட்டினம், கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோவும் கலந்து கொண்டார். நாங்கள் இருவரும் இலக்கியம் தொடர்பாக கருத்துரைகள் வழங்கினோம்.

    அப்போது மரியாதை நிமித்தமாக நாங்கள் சந்தித்து பேசிக் கொண்டோம். நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை. நான் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி தமிழ் இலக்கிய மேடைகளில் பங்கேற்று வருகிறேன். ம.தி.மு.க.வில் மீண்டும் சேரும் எண்ணம் இல்லை. இதுபோல எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு கிடையாது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலையை போல தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய மக்கள் மீது போலீசை ஏவி தாக்குதல் நடந்துள்ளது. இதன் மூலம் அழியாத பழியை தேடி உள்ளது எடப்பாடி அரசு. இதற்கு அவரால் பிராயச்சித்தம் தேட முடியாது. பலியானவர்களின் ஆவி அவர்களை சும்மா விடாது.

    தற்போது 56 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் உள்ளனர். ஆனால் அவர்களை சந்திக்க முதல்-அமைச்சர் அங்கு செல்லவில்லை. தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல நடப்பது அ.தி.மு.க. ஆட்சியா அல்லது பா.ஜ.க. ஆட்சியா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #vaiko 

    ×